நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்: எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை: நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த, பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழுடன் தங்கள் நிலத்திற்கான பட்டா மற்றும் அடங்கல்-உடன் நெல் மூட்டைகளைக் கொண்டுவரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார்.

ஆனால், இன்னும் பல நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை என்றும், டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும், திட்டக்குடி தாலுக்காவில் தர்ம குடிகாடு கொட்டாரம், போத்திர மங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊர்களில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது இயங்கவில்லை என்றும், இதுபோல் கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதனால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்கவும், அதற்கு தேவையான சாக்குப் பை, தார்ப்பாய் போன்றவற்றை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: