×

தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டால் கனவு நனவானது முதல்வர் கையால் இன்ஜினியரிங் படிக்க அனுமதி பெறும் அரசுப்பள்ளி மாணவர்

காரைக்குடி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, எஸ்.எஸ்.கோட்டை அரசு பள்ளி மாணவர் கட் ஆப் மார்க்கில் இரண்டாம் இடம் பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் இன்று இன்ஜினியரிங் படிக்க அனுமதி கடிதம் பெற உள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே எஸ்.எஸ்.கோட்டை அரசு பள்ளியில் படித்த சண்முகவேல் என்ற மாணவர் 197.53 கட்ஆப் மார்க் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இவர் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடந்த கவுன்சலிங்கில் கலந்து கொண்டு சென்னை எம்ஐடி கல்லூரியை தேர்வு செய்துள்ளார். மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் சண்முகவேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை அளிக்கவுள்ளார். மாணவர் சண்முகவேல் கூறுகையில், ‘‘பிளஸ் 2 தேர்வில் 588 மார்க் பெற்று 197.53 கட்ஆப் உள்ளது. எனது தந்தை ராஜ்குமார் கொத்தனராக உள்ளார். தாய் அழகுமலர் நூறுநாள் வேலை பார்க்கிறார். பெற்றோர் கஷ்டமான நிலையில்தான் என்னை படிக்க வைத்தனர். 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் பொறியியல் கட்ஆப் மார்க்கில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன்.

முதல்வர் கையால் இன்று அனுமதி கடிதம் பெற உள்ளது சொல்லமுடியாத மகிழ்ச்சியாக உள்ளது. சிறுவயது முதலே எனக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.  முதல்வர் அறிவிப்பின் காரணமாகவே நான் நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவை எடுக்க முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த எம்ஐடி கல்லூரியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. அது நிறைவேறி உள்ளது’’ என்றார்.

Tags : Tamil Nadu government , Tamil Nadu Su, Reservation, Chief Minister, Engineering Studies,
× RELATED ஒரு நாள் பாதிப்பு, பலி எண்ணிக்கை 14,313; 181...