நாடு முழுவதும் கடந்தாண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி: ஊரடங்குக்கு பிறகு அதிகம் நடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். தினமும் சராசரியாக 328 பேர் பலியாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.   நாட்டில் கடந்தாண்டு அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, விபத்துகளும் அதிகரித்தன. கடந்த 3 ஆண்டுகளில் 3.92 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரையில் நடந்த சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. ்அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* சாலைகளில் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டியதால் நடந்த விபத்துகளில் கடந்த ஓராண்டில் (2020) மட்டும் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2019ம் ஆண்டு 1.39 லட்சம் பேரும், 2018ம் ஆண்டு 1.35 லட்சம் பேரும் இறந்துள்ளனர்.

* கடந்தாண்டில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது தொடர்பாக மொத்தம் 1.30 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018ல் 1.66 லட்சமும், 2019ல் 1.60 லட்சம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

* அதிவேகமாக வாகனங்களை ஓட்டி நடந்த விபத்துகளில் படுகாயம் அடைந்ததாக 2020ம் ஆண்டில் 85,920 வழக்குகளும், 2019ல் 1.12 லட்சம், 2018ல் 1.08 லட்சம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

* கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்ததால் நடந்த விபத்துகள், 2020ம் ஆண்டல் 52 பதிவாகியுள்ளது. 2019ம் ஆண்டில் 55, 2018ம் ஆண்டில் 35 பதிவாகி உள்ளன.  

* மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் உயிரிழந்ததாக 2020ம் ஆண்டு 133 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ம் ஆண்டில்  201, 2018ம் ஆண்டில் 218 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

* உள்ளாட்சி துறைகளின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக நாடு முழுவதும் 2020ல் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ல் 147 வழக்குகளும், 2018ல் 40 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

ஹிட் அண்ட் ரன் வழக்கு 1.35 லட்சம்

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் (ஹிட் அண்ட் ரன்) வாகனங்கள் தப்பிச் சென்ற வழக்குகள் 1.35 லட்சம் பதிவாகி உள்ளன. இதில், 2018ம் ஆண்டில் 47,028, 2019ம் ஆண்டில் 47,504, 2020ம் ஆண்டில் 41,196 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Related Stories: