வெளிநாட்டில் இருந்து ரூ.960 கோடியை கடன் வாங்கி என்ன பண்றீங்க?... ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு கேள்வி

புதுடெல்லி: வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ரூ.960 கோடி கடனை பயன்படுத்தாமலே இருப்பதற்கான காரணத்தை கூறுமாறு ஆந்திர மாநில அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் 14 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, உலக வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு நிதி அமைப்புகளிடம் இருந்து பல ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடனை திட்டப்பணிகளுக்கு முறையாக செலவிடப்படவில்லை, மேலும், செய்து முடித்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சமீபத்தில் ரூ.960 கோடி வெளிநாட்டு கடன் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பணத்தை ஆந்திர அரசு ஏன் பயன்படுத்தாமலேயே உள்ளது என்று ஒன்றிய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை, அறிக்கை தரும்படி ஆந்திர மாநில நிதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார விவகாரத்துறை, ஆந்திர மாநில முதன்மை நிதி செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘செப்டம்பர் 7ம் தேதிப்படி, வெளிநாட்டிலிருந்து ரூ.960 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இதனால் வட்டி பணம் வீணாவதோடு, பணிகளும் மந்த கதியில் நடக்கின்றன. பணிகளை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களுக்கும் நிதி விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: