குறைந்த செலவில் நிறைந்த பலன் செயற்கைக்கோள்களை ஏவ சிறு ராக்கெட்கள் தயாரிப்பு: உள்நாட்டு நிறுவனங்களே அசத்தும்

பெங்களூரு: ‘செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சிறிய வகை ராக்கெட்டுகளை உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும்,’ என்று என்எஸ்ஐஎல் தலைவர் தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் இஸ்ரோ சாதனை படைத்து வருகிறது. விண்வெளி துறையில் வளர்ச்சி அடையாத நாடுகள் மட்டுமின்றி, வளர்ச்சி அடைந்த நாடுகளும் தங்கள் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோவை நாடுகின்றன. இஸ்ரோவின் சார்பில் என்எஸ்ஐஎல் என்ற புதிய பிரிவு ஏற்கனவே உருவாக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இத்துறையின் தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வணிக ரீதியாக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும் வாய்ப்பு இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது. இதை முன்னிட்டு  ஜிஎஸ்எல்வி- எம்கே 111 மற்றும் எஸ்எஸ்எல்வி (சிறிய ராக்கெட்டுகள்) தயாரிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நமது உள்நாட்டு தொழிற்சாலைகளில் இதற்காக உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எச்ஏஎல், எல் அண்ட் டி, பிஇஎல்-அதானி பிஇஎம்எல் மற்றும் பிஎச்இஎல் ஆகிய நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு ராக்கெட் தயாரிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.  இன்னும் இரண்டு மாதத்திற்குள் ராக்கெட் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்படும் சிறிய வகை ராக்கெட் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடனே, ராக்கெட் தயாரிக்கும் பணி விரைவாக நடைபெறும். இந்த வருடத்திற்குள்  ஜிஎஸ்எல்வி - எம்கே 111 தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அதே நேரம் சிறிய வகை செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் ராக்கெட், உள்நாட்டு தொழிற்சாலைகளின் உதவியால் தயாரிக்கப்படும். இதன் மூலம், தயாரிப்பு செலவுகள் குறைவதோடு, நிறைய பலன்களும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

500 கிமீ உயரத்தில் நிலை நிறுத்தும்

*  சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் (எஸ்எஸ்எல்வி) மூன்று அடுக்குகளை உடையது.

*  இவை 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் கீழ் சுற்று வட்டப்பாதையில் 500 கிமீ உயரத்தில் நிலை நிறுத்த  பயன்படும்.

* மேலும், 300 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சூரிய வட்ட  பாதையில் நிலை நிறுத்தும் திறன் உடையதாகும்.

8 நாடு முழுவதிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட விண்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலைகளின் பங்களிப்பு  இத்திட்டத்தில் உள்ளது. 

Related Stories:

>