இலங்கைக்கு கடத்தி சென்ற 2,000 கிலோ மஞ்சள் பறிமுதல்: மண்டபத்தை சேர்ந்த 6 பேர் கைது

ராமநாதபுரம்: கொரோனா  தொற்று தடுப்பாற்றல் மருத்துவக் குணம் சமையல் மஞ்சளுக்கு இருக்கிறது என்பதால் இலங்கையில் சமையல் மஞ்சள்  தேவை எகிறுகிறது. இதனால் மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்தது. அங்கு மஞ்சள்  தற்போது கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதையடுத்து,  தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் படகு மூலம்  கடத்தி செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே  வேதாளை கடற்பகுதியில் இருந்து சமையல் மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில்  கடத்திச் சென்ற 6 பேர் இலங்கையில் நேற்று முன்தினம் சிக்கினர்.  

இலங்கை புத்தளம் கல்பிட்டி கடற்பரப்பிற்குள் சமையல் மஞ்சளுடன் ஊடுருவிய  தமிழக பதிவெண் கொண்ட நாட்டுப் படகை இலங்கை கடற்படையினர் மடக்கினர். படகில் 62 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் இருந்தது. படகில் இருந்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மர்சுக், பகுர்தீன்,  வேதாளை வேலவன் குடியிருப்பு மோகன்தாஸ், சூடைவலை குடிசை பகுதி குகன், அபு  கனி, ரஹ்மான் அலி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 6 பேரும் அந்நாட்டு சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1,500 கிலோ கடல் அட்டை சிக்கியது

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள், வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஹோவர்கிராப்ட் படகு மூலம் நேற்று காலை கூட்டு ரோந்து சென்றனர். மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற பதிவெண் இல்லா நாட்டுப்படகில், பதப்படுத்தப்படாத 1,500 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். படகில் இருந்து 4 பேர் தப்பினர். தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று டூவீலரில் வந்த முகமது யாசர் அலியை பிடித்து, 22 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: