இழந்ததும் அதே நாள்; கிடைத்ததும் அதே நாள் விபத்தில் இரட்டையரை பறிகொடுத்த தம்பதிக்கு செயற்கை கருவூட்டல் மூலம் இரட்டை குழந்தை: ஆந்திராவில் நெகழ்ச்சி சம்பவம்

விசாகப்பட்டிணம்: ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் படகு விபத்தில் தங்களின் இரட்டை பெண் குழந்தையை பறிகொடுத்த தம்பதிக்கு, இந்தாண்டு செயற்கை கருவூட்டல் மூலம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ‘இது, இறைவன் கொடுத்த வரம்,’ என்று அவர்கள் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்த தம்பதி அப்பால ராஜூ, பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் இருந்தனர். இவரும் இரட்டையர்கள். கடந்த 2019ம் ஆண்டு, செப்டம்பர் 15ம் தேதி அப்பால ராஜூவின் தாயார், இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தெலங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோயிலுக்கு சென்றார்.

அங்கு படகில் கோதாவரி ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட விபத்தில் 2 பெண் குழந்தைகளுடன் அவரும் இறந்தார். இதனால் அப்பால ராஜூ தம்பதியினர் சோகத்தில் மூழ்கினர். இவர்கள் ஏற்கனவே கருத்தடை செய்து இருந்ததால், மீண்டும் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், குழந்தையை இழந்த தம்பதி செயற்கை கருவூட்டல் மையத்தை அணுகினர். ஆனால், கொரோனா காலம் என்பதால் டாக்டர்கள் கடந்தாண்டு அவர்களுக்கு செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். கொரோனா அபாயம் நீங்கிய பிறகு, மிகவும் கவனமாக கருத்தறிக்க வைக்கும் முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சியில் வெற்றியும் பெற்றனர். பாக்கியலட்சுமிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவும் தங்களின் இருமகள்களை விபத்தில் பறிகொடுத்த அதே செப்டம்பர் 15ம் தேதியே இந்த இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. ‘இது, இறைவன் கொடுத்த வரம்,’ என்று அவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

டாக்டர் சுதா பத்மஸ்ரீ கூறுகையில், ‘‘இவர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து சவாலாகவே ஏற்று சிகிச்சை அளித்தேன். தம்பதியும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று 1.9 கிலோ, மற்றொரு குழந்தை 1.6 கிலோ என ஆரோக்கியமாக இருக்கின்றன,’’ என்றார்.

Related Stories:

>