தங்கம், வைர நகைகள் குவியல் இருக்கிறதா? பூரி ஜெகந்நாதர் கோயிலில் புதையல் வேட்டை துவக்கம்: தொல்லியல் துறை ஆய்வு

பூரி: பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள இமார் மடத்தில் தங்கம், வைர நகைகள் புதையல் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தொல்லியல் துறையினர் மெட்டல் டிடெக்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில், உலகளவில் புகழ் பெற்றது. இதில் உள்ள இமார் மடம் ராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்ட புராதனமானது. இந்த மடத்தில் புதையல்கள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. இந்த தகவல்கள் மக்களிடம் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு இந்த மடத்தில் இருந்து 18 டன் எடை கொண்ட 522 வெள்ளிக்கட்டி புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.90 கோடி. அதே போன்று, கடந்த ஏப்ரல் மாதம் 35 கிலோ எடையுள்ள 45 வெள்ளிக்கட்டிகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.

இது தவிர வெள்ளி மரம், வெள்ளி மலர், 16 புராதன வாள்கள், வெண்கல பசு சிலை ஆகியவையம்  எடுக்கப்பட்டது. இவை மாநில அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், இமார் மடத்துக்குள் தங்கள், வைரம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த பொருட்களும் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் பரவின.

இதையடுத்து, மடாதிபதி நாராயண ராமானுஜ தாஸ் கேட்டுக் கொண்டதால் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள், ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில், கலெக்டர் சமார்த் வர்மா மேற்பார்வையில் மெட்டல் டிடெக்டர் மூலம் மடத்தின் அனைத்து பகுதிகளிலும் புதையல் வேட்டையில் கடந்த வியாழக்கிழமை முதல் ஈடுபட்டனர். அப்போது, மெட்டல் டிடெக்டர்களில் இருந்து ஒலி எழுந்தது. இதன்மூலம், அவர்கள் சோதனை செய்த இடங்களில், பூமிக்கடியில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories: