அகழாய்வு நடத்த ஒத்துழைப்போம் தமிழகத்துக்கு கேரள அமைச்சர் உறுதி

சென்னை: கேரள பட்டிணத்தில் தமிழகம் அகழாய்வு செய்ய விரும்பினால், அதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்த பிறகு, கேரள மாநில  துறைமுகங்கள் துறை அமைச்சர் அஹமது தேவர் கோவில் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவுடன், கேரளா துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் சந்தித்தார்.  இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் அமைக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் பொருட்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி கோரப்பட்டது. புதிதாக கேரளாவில் அமையும் துறைமுகம், ஆழ்கடல் பகுதியில் அமையவுள்ளதால் அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும், பொருட்கள் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும். இப்பணிக்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் கடிதமாக பெறப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். முதலமைச்சர் தான் இதில் முடிவெடுக்க முடியும். அதற்கு பிறகு அரசு உரிய முடிவை தெரிவிக்கும்.

சிறு துறைமுகத்துறையின் அதிகாரம் மாநில அரசின் கீழ் தான் இருக்க வேண்டும் என்பது தான் தமிழகத்தின் கொள்கை. அந்த அடிப்படையில் முதலமைச்சர், கடலோரங்களில் உள்ள மாநிலங்களுக்கு கடிதம் எழுதினார். கேரளாவிற்கு கடிதம் எழுதப்பட்டது. சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கீழ் தான் இருக்க வேண்டும் என்பது கேரள அரசின் கொள்கையாகவும் உள்ளது. கேரளாவும் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கேரளா அமைச்சர் அஹமது தேவர்கோவில் கூறுகையில், ‘‘விழிஞ்சம் துறைமுக கட்டுமானத்துக்கு தேவையான பாறைகளை தமிழகத்திலிருந்து கொண்டு செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என  பொதுப்பணி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்துள்ளோம். விழிஞ்சம் துறைமுகம் அமையும் பட்சத்தில் தமிழகத்திலிருந்து கேரளா கொண்டு செல்லும் அத்தியாவசிய பயண செலவு குறையும்.

கேரளாவின் பட்டணத்தில் தமிழகம் அகழாய்வு செய்ய, கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.  அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் தமிழ்நாட்டின் முயற்சிக்கு, கேரள அரசு உறுதுணையாகவும், தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக உள்ளது. இவ்வாறு கேரள அமைச்சர் கூறினார்.

Related Stories: