அக்டோபர் மாதம் முதல் தமிழகத்துக்கு மீண்டும் வருகிறது கிருஷ்ணா நீர்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து, அக்டோபர் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அக்டோபர் மாதம் கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, கண்டலேறு அணையில் இருந்து ஜூன் 14ம் தேதி 500 கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த, தண்ணீர் 152 கி.மீ தூரம் பயணித்து கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக எல்லையை வந்தடைந்தது.

ஆரம்பத்தில் 40 கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. ஒப்பந்தப்படி ஏற்கனவே, 4 டிஎம்சி பாக்கி வைத்துள்ள நிலையில், நடப்பு முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சியும் தர வேண்டியுள்ளது.

இந்சூழ்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் ஆகிய 5 ஏரிகளில் நீர் மட்டம் 10 டிஎம்சியாக உயர்ந்தது. தொடர்ந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், 5 ஏரிகளின் நீர் மட்டம் குறைந்தது.ஆனால், கண்டலேறு அணையில் தண்ணீர் இருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், தற்போது 5 ஏரிகளில் 9.5 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் திறந்தாலும் சேமித்து வைக்க போதிய வசதியில்லை. எனவே, கண்டலேறு அணையில் இருந்து தற்போதைக்கு நீர் தேவை இல்லை என்பதாலும், பருவமழை முன்னெச்சரிக்கையாக கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 16ம் தேதியுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் நேற்று காலை 6 மணி நிலவரப்படி தமிழக எல்லைக்கு நீர்வரத்து 120 கன அடியாக இருந்தது. இதுவரை கண்டலேறு அணையில் இருந்து 4.45 டிஎம்சி வரை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணா கால்வாய், பேபி கால்வாய் பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு, அக்டோபர் மாதத்தில் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: