தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 16.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கை தாண்டி சாதனை: சென்னையில் 2லட்சம் பேருக்கு போடப்பட்டது

சென்னை : தமிழகத்தில் நேற்று நடைபெற்ற, 2ம் கட்ட மெகா சிறப்பு கொரோனா  தடுப்பூசி முகாமில் 16.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகம்  முழுவதும் நேற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு  முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி  மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில், காலை 7 மணிக்கு துவங்கியது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி  போடப்பட்டன. இப்பணியில் 2  லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையை பொறுத்தவரை 1,600 சிறப்பு முகாம்களில் நேற்று  காலை 7 மணியில் இருந்தே தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. அனைத்து முகாம்களிலும் காலை 8மணிக்கே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக  காணப்பட்டது.

மேலும், ஒவ்வொரு வார்டிலும் 2 நடமாடும் தடுப்பூசி முகாமும்  செயல்பட்டது. ஒரே இடத்தில் நடமாடும் முகாம்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டு  அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் சென்னையில்  600 டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 7000  பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் சிறப்பு முகாம்கள்  எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் இந்த  தொலைபேசியில் முகாம் நடைபெறும் இடங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.

இதுதவிர https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp  என்ற இணையதளத்திலும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டு  இருந்ததால் அதனை பார்த்தும் பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக்  கொண்டனர். அதன்படி நேற்று நடைபெற்ற 2ம் கட்ட மெகா சிறப்பு  கொரோனா தடுப்பூசி முகாம்களில் நேற்று தமிழகத்தில் 16.02 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கையிருப்பு 17 லட்சம் தடுப்பூசிகள் இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளனர். சென்னையில் மட்டும் 2,01,805 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>