கேரளாவில் லைப் மிஷன் திட்டத்தில் 2,62,131 பேருக்கு இலவச வீடுகள்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 வருடத்தில் ஏழைகளுக்கு 2,62,131 இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் நிலம், வீடு இல்லாத ஏழைகளுக்கு லைப் மிஷன் என்ற பெயரில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. பினராயி தலைமையிலான இடது முன்னணி அரசும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 2வதாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் அரசு 100 நாள் செயல்திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தில் லைப் மிஷன் திட்டத்தையும் சேர்த்து கூடுதல் வீடுகள் கட்டி கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கட்டி முடிக்கப்பட்ட 12,067 வீடுகள் நேற்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் பயனாளிகளுக்கு இலவச வீடுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 2016 முதல் கடந்த 5 வருடங்களில் 2,62,131 வீடுகள் லைப் மிஷன் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நிலமற்றவர்களின் மறுவாழ்வுக்காக  2,207 வீடுகளைக் கொண்ட 36 வீட்டு வளாகங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று  வருகின்றன. மேலும், 17 வீட்டு வளாகங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு  லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவும், அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: