கேரளாவில் கடந்த 5 வருடத்தில் 1,213 சிறுவர், சிறுமியர் தற்கொலை: குற்ற ஆவண காப்பகம் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில்  பெற்றோர் கண்டித்தல், காதல் தோல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக கடந்த 5  ஆண்டுகளில் 1213 சிறுவர், சிறுமிகள் தற்கொலை செய்துள்ளதாக  குற்ற ஆவண காப்பகம் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளது. கேரளாவில் கடந்த  சில வருடங்களாக 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள் தற்கொலை செய்து  கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலம் தொடங்கிய பின்னர்,  தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் 324 சிறுவர்,  சிறுமிகள் தற்கொலை செய்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம்  வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி கடந்த 5  வருடத்தில் 1213 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்களின் தற்கொலைக்கு  பெற்றோர் கண்டித்தல், காதல் தோல்விகள் தான் காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையே  கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31ம் வரை சிறுவர், சிறுமியர் தற்கொலைகள்  குறித்து பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி துறை ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி டூ ஜூலை ஆகிய  7 மாதங்களில்  17 வயதுக்கு குறைவான 158 சிறுவர், சிறுமிகள் தற்கொலை செய்து உள்ளனர்.

இதில்  90 பேர் சிறுமிகளும், 68 பேர் சிறுவர்களும் ஆவர். மலப்புரம் மாவட்டத்தில்  தான் அதிகமாக 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 15-18 வயதுக்கு இடையே  108 பேரும், 9-14 வயதுக்கு இடையே 49 பேரும் தற்கொலை செய்துள்ளனர். பெற்றோர்  கண்டித்தால் அதிகமாக 19 பேர் தற்கொலை செய்துள்ளனர். காதல் தோல்வியால் 14  பேரும், செல்போன் கேம், இண்டர்நெட் அடிக்சனுக்கு 12 பேரும், குடும்ப  பிரச்னை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொடுமைக்கு 12 ேபரும்,  தேர்வு  தோல்வி அடைந்தது மற்றும் தேர்வு பயத்தில் 7 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இவர்களில்  41 பேர் தற்கொலை செய்ததற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டவர்களில் 134 பேர் தூக்குபோட்டும், 12 பேர் விஷம்  அருந்தியும், 6 பேர் தீக்குளித்தும் இறந்துள்ளனர். அதிலும் குறிப்பாக  நன்றாக படித்து வந்து 50 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது  என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண்கள் மற்றும்  குழந்தைகள் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுவர், சிறுமியர்  இடையே ஏற்பட்டுள்ள தற்கொலை எண்ணத்தை இல்லாமல் ஆக்க எங்கள் துறை பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக போன் மூலம் கவுன்சிலிங் திட்டமும்  அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: