நாகர்கோவிலில் பாதியில் நிற்கும் கழிவு நீரோடை மேல்தளம் அமைக்கும் பணி: வாகன ஓட்டிகள் அச்சம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 36 வது வார்டு வைத்தியநாதபுரம் வீரசிவாஜி தெருவில் சாலையின் இடதுபுறம்  மிகப்பெரிய கழிவு நீரோடை அமைந்துள்ளது. இந்த சாலை பேவர் பிளாக் போடப்பட்டுள்ளது. சுமார் 7 அடி வரை ஆழம் உள்ள இந்த கழிவு நீர் ஓடையின் மேல் தளத்தின் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் கான்கிரீட் மேல் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடும் செய்தார். ஆனால் பாதி அளவுக்கு தான் மேல் தளம் போட்டப்பட்டது.

அதன் பின்னர் அப்படியே பணியை நிறுத்தி விட்டனர். மேல் தளம் இல்லாமல் கழிவு  நீரோடை திறந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகளும் சரி வர வில்லை. கான்கிரீட் தளம் இருப்பதாக நினைத்து இடதுபுறமாக பைக்கில் வருபவர்கள், பாதியில் நிற்பது தெரியாமல் கழிவு நீரோடைக்குள் விழும் நிலை உள்ளது. எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக இடதுபுறம் வாகனத்தை திருப்பினாலும் ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது.

எனவே உடனடியாக பாதியில் நிற்கும் கான்கிரீட் மேல் தள பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது முழுமையாக கழிவு நீரோடை மேல் கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கினார். ஆனால் அதிகாரிகள் சரிவர  நடவடிக்கை எடுக்காததால், பணிகள் பாதியில் நிற்பதாக கூறினர்.

Related Stories:

>