பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு..!

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் முக்கிய திருப்பமாக ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரீந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்தார். அமரீந்தர் சிங் அரசில் சரண்ஜித் சிங் சன்னி, தொழில்நுட்பக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பஞ்சாப்பில் விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க புதிதாக தேர்வான முதலமைச்சர் சரண்ஜித் சிங் உரிமை கோருகிறார்.

Related Stories:

>