அனைத்து கட்சிகளும் புது கூட்டணியை உருவாக்கியதால் எதிர்கட்சி இல்லாத நாகலாந்து பேரவை

கோஹிமா: நாகலாந்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியதால், அம்மாநிலத்தில் எதிர்கட்சியே இல்லாத அரசு செயல்பட்டு வருகிறது. நாகலாந்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் என்டிபிபி - பாஜக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டசபையில் 20 என்டிபிபி எம்எல்ஏக்கள், 12 பாஜக எம்எல்ஏக்கள், 25 என்பிஎப் எம்எல்ஏக்கள், இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில், என்டிபிபி எம்எல்ஏ டோஷி வுங்க்துங் உடல்நலக்குறைவால் இறந்ததால், அம்மாநில சட்டசபையில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. இந்நிலையில், முக்கிய திருப்பமாக ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. நாகலாந்தில் நடந்துள்ள இந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. கோஹிமாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்டிபிபி,  பாஜக, என்பிஎப் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யுடிஏ) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இதுதொடர்பாக  நாகாலாந்து முதல்வர் நெஃபியு ரியோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாகாலாந்தில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி என்று கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இதில், என்டிபிபி, பாஜக, என்பிஎப் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் இணைந்து அரசை வழி நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: