செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவியை தொடர்ந்து கவுன்சிலர் பதவி ரூ20.8 லட்சத்துக்கு ஏலம்: ஆட்சியர் விசாரணை நடத்திய நிலையில் அடுத்தடுத்து பரபரப்பு

செஞ்சி: செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்திய நிலையில் நேற்றிரவு ஒன்றிய கவுன்சிலர் பதவியை ரூ.20.8 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

பொன்னங்குப்பம் ஊராட்சியில் பொன்னங்குப்பத்தை சேர்ந்த 1,472 வாக்காளர்களும், துத்திப்பட்டை சேர்ந்த 3,800 வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிக வாக்குகள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்களே கடந்த 3 முறையாக ஏலம் விட்டு தலைவர் பதவியில் இருந்துள்ளனர். இதுவரை பொது பதவியாக இருந்த பொன்னங்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி இந்த முறை ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஞ்சி வட்டாட்சியர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் ஏலம் விடப்படுவது சட்டப்படி குற்றம் என வெள்ளிக்கிழமை கிராம மக்களிடம் சென்று அறிவிப்பை செய்தும் அன்று இரவே ரூ.13 லட்சத்திற்கு தலைவர் பதவியை முனுசாமி மனைவி மங்கை என்பவருக்கு ஏலம் விடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகின. இதனால் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு முறையும் உள்ளாட்சித் தேர்தலின்போது பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது என கிராம மக்கள் கலெக்டரிடம் கூறியதோடு இனிவரும் காலங்களில் பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் மோகன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

 இந்த விவகாரம் தொடர்பாக துத்திப்பட்டு, பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மீது அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் துத்திப்பட்டு கிராமத்தில் நேற்றிரவு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒருவர் 20 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. துத்திப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை அடுத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>