தமிழகம் முழுவதும் இன்று 20,000 மையங்களில் நடந்தது: மெகா தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

* பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு  

* 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்டமாக 20,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்ெகாண்டார். தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், அடுத்த ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்றைய நாளில் பல்வேறு மையங்களில் பிற்பகலுக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அதிகம் முன்வருவதால் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 2ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 20 ஆயிரம் மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 15 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு விரைந்து கூடுதல் தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் மூன்று மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதைப்போன்று சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதியன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 98,227 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 93,123 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் பொழுது பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயனடைகின்றனர்.

எனவே இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், இன்று சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறுகிற 1,600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-2538 4520, 044-4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தகவல்களை பெற்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்  சென்னை, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணியளவில் திடீரென ஆய்வு மேற்ெகாண்டார். அப்போது அதிகாரிகளிடம் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் செலுத்தப்படுகிறதா? தற்போது இந்த முகாமில் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கேட்டறிந்தார். நண்பகல் 12 மணி நிலவரப்படி தமிழகத்தில் 5.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>