ரெய்டில் சிக்கிய வீரமணியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் சந்திப்பு

ஜோலார்பேட்டை: விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் சந்தித்து பேசினர். தமிழக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள அவருடைய வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஸ்தாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து 17 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதேபோல் ஏலகிரியில் உள்ள சொகுசு பங்களா, வேளாண் கல்லூரி மற்றும் கே.சி.வீரமணியின் பினாமிகளின் வீடுகள் உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணியின் வீட்டிற்கு சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை குறித்து விசாரித்தார்.

நேற்று முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், கே.சி.வீரமணியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை குறித்து கேட்டறிந்தனர்.

Related Stories: