2 ஆயிரம் கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்: 6 பேர் கைது

ராமநாதபுரம்: இரண்டாயிரம் கிலோ மஞ்சள் மூட்டைகளுடன் தமிழக நாட்டுப் படகில் சென்ற 6 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க இலங்கையில் சமையல் மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கும் பொருட்டு சமையல் மஞ்சள், கிராம்பு, ஏலம், முந்திரி, மாசி கருவாடு, கசகசா உள்பட 11 வகை வெளிநாட்டு சமையல் பொருட்களுக்கு கடந்த 2020 ஜன.முதல் வாரத்தில் நடந்த இலங்கை நாடாளுமன்ற முதல் அமர்வு கூட்டத்தில் தடை விதித்து சட்டமியற்றியது.

இதனால், அங்கு சமையல் மஞ்சள் தற்போதைய சந்தை விலை கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மர்மப்படகு மூலம் மஞ்சள் மூட்டைகள் கடத்திச் செல்வது அதிகரித்தது. ஆனால், இக்கடத்தல் முயற்சி தமிழக போலீசாரால் பல முறை தடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு டன் கணக்கில் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்பகுதியில் இருந்து சமையல் மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில் கடத்திச் சென்ற 6 பேர் இலங்கையில் நேற்று மாலை சிக்கினர்.

இலங்கை புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பிற்குள் சமையல் மஞ்சளுடன் ஊடுருவிய தமிழக பதிவெண் கொண்ட நாட்டுப் படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அப்படகில் 62 மூடைகளில் 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் இருந்தது. இதையடுத்து அப்படகை கைப்பற்றிய கடற்படையினர் அதில் இருந்த, ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, மரைக்காயர்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த அபுகனி, மோகன் தாஸ், குகன், ரஹ்மான் அலி, அஹமது குட்டி உள்பட 6 பேரை கற்பிட்டி கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றனர்.

அந்த 6 பேரில் இருவர் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது ஏற்கனவே செய்யப்பட்டவர்களாவர். இதனால் அந்த 6 பேரையும் கைது செய்வதா? அல்லது திருப்பி அனுப்புவதா? என்பது குறித்து இலங்கை கடற்படை உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories: