குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சவுரிமுடி தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் சுறுசுறுப்பு.!

உடன்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பிரசித்திப் பெற்ற இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், விரதமிருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கைகள் வசூலித்து கோயிலில் ஒப்படைப்பர். கடந்தாண்டு கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின்றி திருவிழா நடந்தது. இந்தாண்டு வருகிற அக்.6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், அக்.15ம் தேதி நடக்கிறது. இந்தாண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம், மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தசரா குழுக்களுக்கு காப்புகளை பெறுவதற்கு ஒரு குழுக்களுக்கு 5 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பக்தர்கள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தசரா திருவிழா கட்டுப்பாடுகள் குறித்த முழு அறிவிப்பு வெளியிடப்படுமென திருச்செந்தூர் ஆர்டிஓ கோகிலா தெரிவித்துள்ளார். வழக்கமாக தசரா திருவிழாவின் ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள், தசரா குழு அமைத்து கரகம், காவடி, நையாண்டி மேளம், செண்டை மேளத்துடன் ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலிப்பர். மேலும் சினிமா நட்சத்திரங்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், அம்மன், காளி, அட்டக்காளி, குரங்கு, குறவன் -குறத்தி, ராஜா- ராணி என பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடல், பாடலுடன் காணிக்கை வசூலித்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விரதமிருந்த பக்தர்கள், தங்கள் ஊரிலேயே வேடமணிந்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இந்தாண்டு கொடியேற்றத்துக்கு 17 நாட்களே உள்ள நிலையில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பக்தர்கள் விரதமிருக்க தொடங்கி உள்ளனர். பக்தர்கள் முருகன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, சக்தி, அம்மன், கிருஷ்ணர், ராஜா, ராணி மற்றும் எந்த சுவாமி வேடமணிந்தாலும் நீளமான முடி அவசியம். இதன் காரணமாக வேடமணியும் பக்தர்கள், தங்களுக்கு தேவையான சவுரி முடிகளை அளவு கொடுத்து செய்ய தொடங்கி உள்ளனர். சிலர், தேவையான அளவில் தயார் நிலையில்  உள்ள முடிகளை வாங்கி சென்ற  வண்ணமும் உள்ளனர். இதனால் உடன்குடி பஜார் பகுதியில் விதவிதமான சவுரி  முடி தயாரிப்பில் தொழிலாளர்கள்  குடும்பம், குடும்பமாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>