பெரம்பலூரில் ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆரோக்கிய இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திரதின விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் 3 கி.மீ. தூரம் நமது இந்திய நாட்டில் உள்ள 744 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம் (மத்திய அரசு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனம்), நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து கடந்த மாதம் 13ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. தனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றது. இந்த சுதந்திர ஓட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த ஓட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குவதால் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும் சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும் உடல் தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றவும் வழிவகை செய்யும். இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி. சுருதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: