தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 20 ஆயிரம் மையங்களில் 2ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் சென்னையில் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா 3ம் அலை இம்மாதம் இறுதி மற்றும் அக்டோபர் முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

தொற்று பரவலின் சங்கிலியை உடைக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்காரணமாக தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், அடுத்த ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அன்றைய நாளில் பல்வேறு மையங்களில் பிற்பகலுக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அதிகம் முன்வருவதால் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 2ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 20 ஆயிரம் மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும் இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறும்போது, தமிழகத்தில் 17 லட்சம் தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளது. அதனால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். மேலும் 15 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மத்திய அரசு விரைந்து கூடுதல் தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் மூன்று மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியும் என்றார்.

அதேபோல் சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12ம் தேதியன்று  1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 98,227 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 93,123 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் பொழுது பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயனடைகின்றனர்.  எனவே இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், இன்று சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறுகிற 1,600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை  பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற  மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-2538 4520, 044-4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: