கோபி அருகே அரசு கொள்முதல் மையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் மழையில் நனைந்து சேதம்

கோபி: கோபி அருகே கனமழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழைக்கு நனைந்து சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள நஞ்சகவுண்டன் பாளையம், கரட்டடி பாளையம், மேவாணி, புதுக்கரை புதூர், கள்ளிப்பட்டி, துறையம்பாளையம், காசிபாளையம் உள்ளிட்ட பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 24 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் அரசின் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நஞ்சகவுண்டன் பாளையத்திலும் தனியார் அரிசி ஆலை வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் மையத்தில் போதிய இட வசதி இல்லாத நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தென்னந்தோப்பிற்குள் மண் தரையில் கொட்டி வைத்து உள்ளனர். நேற்று முன்தினமும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல்லை கொட்டி வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் நெல் கொள்முதல் மையத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான  நெல் மூட்டைகள் முழுமையாக மழையில் நனைந்து சேதமடைந்தது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் அறுவடை நடைபெற்று வருகிறது.

அறுவடை நேரத்தில் மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்த நெல்லை நஞ்சகவுண்டன்பாளையம் அரசு நெல் கொள்முதல் மையத்தில் கொட்டி வைத்து இருந்த நிலையில் மழையால் முழுமையாக நனைந்துவிட்டது. அரசு கொள்முதல் மையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொட்டி வைப்பதற்கு பாதுகாப்பான கட்டிடம் இல்லாததால் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு பாதுகாப்பான இடத்திறகு நெல் கொள்முதல் மையத்தை மற்ற வேண்டும் என்றனர்.

* ரூ.40 லட்சம் கரும்புகள் சேதம்

கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம் பாளையம், நாதிபாளையம், கரட்டூர். தாசம்பாளையம், ஒத்தகெதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்த்த கன மழையால் கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘ஒரு வருட கால பயிரான கரும்பு, ஓரிரு வார காலத்தில்  அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. கனமழைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>