கொள்ளிடம் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்

கொள்ளிடம்: கொள்ளிடம் கடைமடை பகுதியில் சம்பா நேரடி விதைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, நல்லூர், அளக்குடி, பாவட்டமேடு, இச்சிலடி, புளியந்துறை ஆகிய கிராமங்கள் காவிரி பாசனம் பெறும் கடைமடை பகுதியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வழக்கமாக இங்கு கடைசி நேரத்தில்தான் வந்து சேருவது வழக்கம். வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்தால்தான் கடைமடை பகுதியான கிராமங்களை தண்ணீர் சென்றடையும். இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10 தினங்களாக கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு சென்று சேர்ந்த நிலையில் உள்ளது.

அவ்வப்போது பெய்துவரும் மழைநீர் விவசாயிகளுக்கு சற்று உகந்ததாக இருந்தது. இந்த மழை நிலங்களை புழுதி உழவு செய்வதற்கு ஏற்றதாக இருந்தது. இந்த மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் புழுதி உழவு செய்து நெல் விதைப்புபணி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோதண்ட புரம்,புளியந்துறை,நல்லூர் ஆரப்பள்ளம் ஆகிய கிராமங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் மழை நீரின் ஈரப்பதத்தை வைத்து புழுதி உழவு செய்து சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,கொள்ளிடம் கடைமடை பகுதியாக உள்ள கிராமங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளதால் தற்போது பெய்த மழையின் ஈரத்தை வைத்து உழவு செய்து சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறோம். வரும் காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பருவமழை பெய்வதற்கு வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே அதனை நம்பி தற்போது தீவிரமாக விதைப்பு செய்து வருகிறோம். நேரடி விதைப்பு செய்வதற்கு டிராக்டரை கொண்டு அதிக தொகை செலவு செய்து நெல் விதைகளை அதிக தொகை கொடுத்து வாங்கி விதைப்பு செய்து வருகிறோம். வாய்க்கால் தண்ணீர் மற்றும் பருவமழை உதவி செய்தால் மட்டுமே கடைமடைப் பகுதியில் சம்பா நேரடி விதைப்பு சாகுபடி செய்து நல்ல முறையில் அறுவடை செய்ய முடியும்.மழை பொழிவு குறைந்து விட்டாலோ, வாய்க்காலில் தண்ணீர் வரத்து நின்று விட்டாலோ நெற் பயிரை பாதுகாப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

Related Stories: