பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி:வார விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்ள குவிந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும், சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நாள் தோறும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்கள் இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் ஊட்டி படகு இல்லம் செல்வது மட்டுமின்றி, இயற்கை சூழ்ந்த பைக்காரா அணைக்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள அணையில் படகு சவாரி செய்யவே, அதுவும் ஸ்பீடு போட்டுக்களில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வார விடுமுறை நாளான நேற்று பைக்காரா படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். தற்போது அணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் நிலையில், இதில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

Related Stories:

>