தர்மபுரி அருகே காதல்ஜோடி ஓட்டம் காதலனின் உறவினர்களை கடத்தி சிறுநீரை குடிக்க வைத்து சித்ரவதை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திருமல்வாடி செம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜா(43). இவரது உறவினரான முனிராஜ் மகன் ரமேஷ்(23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது. இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீசார் காதல் ஜோடியை அழைத்து விசாரித்தனர். அப்போது, பெற்றோருடன் செல்வதாக இளம்பெண் கூறினார். இதையடுத்து, அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.  

இதனிடையே, காதல் ஜோடியினர் தலைமறைவாக இருந்த நேரத்தில், அவர்களை தேடி வந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ரமேஷின் உறவினர்களான ராஜா, கோவிந்தராஜ், குமார் ஆகியோரை பிடித்துச்சென்று சித்ரவதை செய்துள்ளனர். இதுபற்றி ராஜா மாரண்டஹள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், தங்களை கடத்திச்சென்ற கும்பல் 3 பேரின் வாயில் பீர், விஸ்கியுடன் சிறுநீரை வலுக்கட்டாயமாக ஊற்றியதுடன், செருப்பால் அடித்து சித்ரவதை செய்தனர் என தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, 12 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>