ஐபிஎல் 14வது சீசன் மீண்டும் தொடக்கம் சென்னை - மும்பை அணிகள் துபாயில் இன்று மோதல்

துபாய்: கொரோனா பரவலால் இடை நிறுத்தப்பட்ட 14வது ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மீண்டும் தொடங்குகின்றன. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன், இந்தியாவில் கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கொரோனா 2வது அலை வேகம் எடுத்ததை அடுத்து, மே 4ம் தேதி நடப்பு சீசன் இடைநிறுத்தப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தன. எஞ்சிய லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்று, இறுதி ஆட்டம் என 31 ஆட்டங்கள் நடக்க வேண்டி இருந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும்,  13வது சீசன் போல் எஞ்சிய ஆட்டங்களை துபாய், ஷார்ஜா, அபுதாபி என  அமீரகத்தில் நடத்த பிசிசிஐ  முடிவு செய்தது. அதற்கேற்ப  செப்.19 - அக்.15 வரை எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் என்று புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் விளையாடுவதற்காக, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. அதில்  முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தோனி தலைமையிலான சிஎஸ்கே, முதல் அணியாக அமீரகம் சென்று கிட்டதட்ட 50 நாட்களாக அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மும்பை அணியும் ஏற்கனவே அமீரகம் சென்று விட்டாலும் கேப்டன் ரோகித், டி காக், இஷான் கிஷன் என பலரும் குவாரன்டைன் முடிந்து சமீபத்தில்தான் அணியுடன் இணைந்துள்ளனர். அதனால் சென்னை அணி புத்துணர்ச்சியுடன் மும்பையை எதிர்கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். போட்டியை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளது, வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் டெல்லி 12 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. சென்னை, பெங்களூரு அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், மும்பை 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.

2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ள ஐதராபாத் அணி, கேன் வில்லியம்சன் தலைமையில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் வரிந்துகட்டுவதால் அமீரக மைதானங்களில் அனல் பறப்பது உறுதி.

இதுவரை...

ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் 31முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. அதில் மும்பை 19 - 12 என முன்னிலை வகிக்கிறது. அவற்றில் 4 முறை பைனலில் மோதியதில் 2013, 2015, 2019ல் மும்பையும்,  2010ல்  சென்னையும் வாகை சூடியுள்ளன.  கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4 வெற்றியை ருசித்துள்ளது.

இந்த தொடரில்...

நடப்புத் தொடரில் மே 1ல் நடந்த  27வது லீக் ஆட்டத்தில் மும்பை-சென்னை அணிகள் மோதின. அதில் மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அணிகள்

சிஎஸ்கே: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, கே.எம்.ஆசிப், ஜேசன் பெஹரண்டார்ப், பகத் வர்மா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், சாம் கரன், டு பிளெஸ்ஸி, ருதுராஜ் கெயிக்வாட், கிருஷ்ணப்ப கவுதம், ஹரி நிஷாந்த், ஜோஷ் ஹேசல்வுட், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, நாராயண் ஜெகதீசன், லுங்கி என்ஜிடி, செதேஷ்வர் புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, சாய் கிஷோர், மிட்செல் சான்ட்னர், கர்ண் ஷர்மா, ஷர்துல் தாகூர், ராபின் உத்தப்பா.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், பியுஷ் சாவ்லா, நாதன் கோல்டர் நைல், டி காக், இஷான் கிஷண், மார்கோ ஜான்சென், தவால் குல்கர்னி, கிறிஸ் லின், ஆடம் மில்னி, மோஷின் கான், ஜேம்ஸ் நீஷம், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, கெய்ரன் போலார்டு, அனுகுல் ராய், ஆதித்யா தாரே, அர்ஜுன் டெண்டுல்கர், சவுரவ் திவாரி, ஜெயந்த் யாதவ், சூரியகுமார் யாதவ், யுத்வீர் சிங்.

Related Stories:

>