×

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் மீட்பு..!!

சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமிப்பு செய்திருந்த 2000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி இன்று ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவிகளை மாற்றியதும் கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக குத்தகைக்கு எடுத்த நிலத்தை பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராமசந்திரன் கூறினார்.


Tags : Jabiar Education Group ,Chennai , Chennai, Jappiyar Education Corporation, Rs.2000 crore, occupied land
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...