அக்.6, 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் வாக்குப்பெட்டிகள்

நெல்லை : நெல்லை  மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக  வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்.6, 9ம் தேதிகளில்  நடக்கும் வாக்குப்பதிவின் போது இவை பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சிகளில் 4 அடுக்கு தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என ஒருவர் நான்கு பேருக்கு வாக்களிக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனி கலர்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஒருவர் நான்கு  வாக்குகள் அளிக்க வேண்டும்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு  உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ சின்னத்தில் போட்டியிடுவர். ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்கள் கிடையாது.  எனவே ஊரக உள்ளாட்சிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பதால், அன்று முதல் உள்ள வாக்குச் சீட்டு முறையே இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த வாக்குச் சீட்டுகளில் வாக்களித்துப் போட அன்று முதல் இன்று வரை இரும்புப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக டான்சி, கோத்ரெஜ் நிறுவனங்கள் தயாரித்த இரும்பு பெட்டிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2016ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்றார். ஆனால் அவர் அந்த ஆண்டு இறுதியில் காலமானார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஒரு சில நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று ஆட்சி மாற்றம் வரை தொடர்ந்தார். இவ்வாறு அடுத்தடுத்த தலைமைகள் மாறியதால் உள்ளாட்சி தேர்தலை அப்போதைய அதிமுக அரசு ஒத்திப்போட்டு வந்தது. உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மட்டும்  ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக். 6, 9 என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு பழைய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் தூசி தட்டப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளன. இவை இரு கட்டங்களாக வருகிற 6, 9ம் தேதிகளில் நடத்தப்படும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 2069 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், டான்சி ஸ்பெஷல் வாக்குப்பெட்டிகள் 1712ம், மீடியம் வாக்குப்பெட்டிகள் 563ம், கோத்ரெஜ் வாக்குப்பெட்டிகள் 1776ம் என மொத்தம் 4051 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

Related Stories:

>