‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் சேலத்திற்கு 3வது இடம்

*43 நாளில் 95,299 பேர் பயன் பெற்றனர்

சேலம் : தமிழகத்தில் 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார். 1 கோடி பேர் வரை பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் கிருஷ்ணகிரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 43 நாட்களில் 5,09,430 பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். தமிழக அளவில் அதிக நபர்களுக்கு சிகிச்சை வழங்கியதில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடமும், ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடமும், சேலம் மாவட்டம் 3வது இடமும் பிடித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் நாமக்கல், தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்கள் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளது.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சர்க்கரை, புற்றுநோய், காசநோய், டயாலிசிஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஏராளமானவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியவில்லை.

தற்போது, முதற் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கடந்த 43 நாட்களில் 95,299 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 95,299 பேர் பயனடைந்துள்ளனர். சேலத்தில்46,515 பேர், கிருஷ்ணகிரியில் 32,102பேர், தர்மபுரியில் 12,150பேர், நாமக்கல்லில் 4,532 பேர் பயன் பெற்றுள்ளனர். இதில் 43,472 பேர் ரத்த அழுத்தத்திற்கும், 28,927 பேர் சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என 2 பாதிப்புகளுக்கு 17,835 பேரும், பிசியோதெரபிக்கு 2,939 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதர சிகிச்சைக்கு 1,126 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இந்தவகையில் தமிழக அளவில் சேலம் மாவட்டம் 3வது இடமும், கிருஷ்ணகிரி மாவட்டம் 4வது இடமும், தர்மபுரி மாவட்டம் 11வது இடமும் பெற்றுள்ளது.   நாமக்கல் மாவட்டம் 36வது இடம் பெற்றுள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் உள்ள நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அனைத்து நோயாளிகளுக்கும் வீடு தேடிச் சென்று மாத்திரை, மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories:

>