×

கர்நாடகா, மகாராஷ்டிராவை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் படையெடுப்பு

*ஆர்டர் அதிகரிப்பால் உற்பத்தியை வேகப்படுத்தினர்

சேலம் : தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வெள்ளிப்பொருட்கள் கேட்டு ஆர்டர் கொடுக்க, சேலத்தில் வியாபாரிகள்  குவிந்து வருகின்றனர். தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னை, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாகிறது.

சேலத்தில் வெள்ளி கால் கொலுசு, அரைஞாண் கொடி, குங்கும சிமிழ், சந்தன கிண்ணம், டம்ளர், குடம், கால்மெட்டி உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, குஜராத், மத்திய பிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டு கொரோனாவால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி சரிந்தது. இதனால் வெள்ளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவில் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை களை கட்டும். ஆனால் நடப்பாண்டு கேரளாவில் கொரோனா தொற்று குறையாததால் வியாபாரிகள் ஆர்டர் தரவில்லை. இதனால் ஓணம் வியாபாரம் இல்லாமல் போனது. இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையின்போது வட மாநிலங்களில் வெள்ளிப்பொருட்களின் விற்பனை களை கட்டும்.

இப்பண்டிகைகளை முன்னிட்டு வடமாநில வியாபாரிகள் இரு மாதத்திற்கு முன்பு வெள்ளிப்பொருட்கள் கேட்டு சேலத்தில் ஆர்டர் கொடுப்பார்கள். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நடப்பாண்டு வெள்ளிப்பொருட்கள் ஆர்டர் கேட்டு கர்நாடகா, மகாராஷ்டிரா வியாபாரிகள் சேலத்திற்கு படையெடுத்து வருவதாக வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

 இது குறித்து சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்க செயலாளர் ஆனந்தராஜன் கூறியதாவது: சேலத்தில் செவ்வாய்ேபட்டை, குகை, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, களரம்பட்டி, கருங்கல்பட்டி, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, சித்தர்கோயில், போடிநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் உள்ளனர்.

இப்பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியை நம்பி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் எளிதில் கருக்காது. அதனால்தான் வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப்பொருட்கள் என்றால் எப்போதும் தனி மவுசு உண்டு. இந்நிலையில் அக்டோபர் 14, 15ம் தேதிகளில் வட மாநிலங்களில் தசரா விழா, நவம்பர் 4ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாக்களை முன்னிட்டு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள வெள்ளி வியாபாரிகள், பல்வேறு பொருட்கள் கேட்டு சேலத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

வட மாநில ஆர்டரால் சேலத்தில் உள்ள வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.இதையொட்டி கடந்த சில நாட்களாக வெள்ளிப்பொருட்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். தசரா, தீபாவளி விழாக்களில் பெண்கள் அணியும் கால்கொலுசு தான் அதிகளவில் விற்பனையாகும். குறிப்பாக லைட் வெயிட் கொலுசு உள்ளிட்ட கால் கொலுசுக்கு வட மாநிலங்களில் அமோக வரவேற்பு உள்ளது. அதனால் மற்ற வெள்ளிப்பொருட்களை விட வெள்ளி கால் கொலுசு அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். இவ்வாறு ஆனந்தராஜன் கூறினார்.

Tags : Karnataka ,Maharashtra , Salem, Dasara, Depavali, Silver,
× RELATED 20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில்...