கடந்தாண்டைப்போல் நடைபெறும் குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

உடன்குடி : முத்தாரம்மன் கோயில் தசரா விழா, மைசூருக்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா திருவிழா, வருகிற அக்.6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம், அக்.15ம் தேதி நள்ளிரவில் நடக்கிறது.

இந்நிலையில் தசரா திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம், கோயில் அருகிலுள்ள மண்டபத்தில் நடந்தது. திருச்செந்தூர் ஆர்டிஓ கோகிலா தலைமை வகித்தார். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமைதா, திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் முன்னிலை வைத்தார்.

இதில் கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  தசரா திருவிழா   கட்டுப்பாடுகளுடன் நடந்தது.

திருவிழா கொடியேற்றம், மகிஷா சூரசம்ஹாரம்  உள்ளிட்ட  முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  மேலும் விரதமிருக்கும்  பக்தர்கள், தங்கள் ஊரிலேயே  வேடமணிந்து  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இந்நிலையில்  தற்போதும் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால்  கடந்தாண்டைப்போலவே இந்தாண்டும்  தசரா திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென தசரா குழுக்கள் கோரிக்கை விடுத்தன.

மேலும் தசரா குழுக்களுக்கு காப்புகளை பெறுவதற்கும்  ஒரு குழுக்களுக்கு 5 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  கடந்தாண்டைப் போலவே  கட்டுப்பாடுகளுடன் தசரா திருவிழா நடைபெறுவதற்கு  பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆர்டிஓ கோகிலா கேட்டுக்கொண்டார்.

மேலும்  பக்தர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும்,  தமிழக அரசுக்கும் விரைந்து  கொண்டு சென்று ஓரிரு நாட்களில்  தசரா திருவிழா கட்டுப்பாடுகள் குறித்த முழு அறிவிப்பு வெளியிடப்படும், என்றார். கூட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி கலைவாணன், தாசில்தார்  ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம்,   குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் தசரா குழுக்களின் நிர்வாகிகள்,  பக்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோயில் பிரகாரத்தில் மாலை அணியும் பக்தர்கள்

தசரா  திருவிழாவை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 30, 10  நாட்கள் என தங்களால் முடிந்த நாட்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம்.  வழக்கமாக குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர்  கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள், அணியும் துளசி மாலையை அம்மனின்  பாதத்தில் வைத்து பூஜைக்கு பிறகு அங்குள்ள பூசாரி அணிவித்து விடுவார்.

கடந்தாண்டு தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு பூசாரி மாலை அணிவிக்கவில்லை. அதேபோல் இந்தாண்டும் விரதமிருக்கும் பக்தர்கள், கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் பெரியோர் அல்லது குழந்தைகளிடம் மாலையை கொடுத்து தங்களது கழுத்தில் அணிந்து வருகின்றனர். வரும் 6ம் தேதி காலை கொடியேற்றத்துக்கு பிறகு விரதம் மேற்கொள்ளும்  பக்தர்கள், கோயிலில் வழங்கப்படும் திருக்காப்பு அணிந்து அவரவர் வேண்டுதல்படி வேடங்கள் அணிந்து காணிக்கைகள் பிரித்து  கோயிலில் ஒப்படைப்பர்.

கோயில் வெளியே நின்று தரிசனம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதிநாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று புரட்டாசி மாத துவக்கத்தையொட்டி குவிந்த பக்தர்கள், குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர். தசரா திருவிழாவிற்கு வேடமணியும்  பக்தர்கள், கடற்கரையில் புனித நீராடி முத்தாரம்மனை தரிசித்தனர். தடை காரணமாக கோயிலை சுற்றி தடுப்புகள்  அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தசரா திருவிழா விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதால், குலசேகரன்பட்டினம் பகுதி முழுவதும் சிவப்பு ஆடை  அணிந்த பக்தர்களாக காட்சியளிக்கின்றனர்.

Related Stories: