தேங்காய் எண்ணெய்க்கு 18% ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது தென் மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை!: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு..!!

சென்னை: தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது தென்னை சாகுபடி அதிகம் உள்ள தென் மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டருக்கும் குறைவாக விற்பனை செய்யும் போது அது கூந்தல் எண்ணெய் என்று பட்டியலிடப்பட்டு 18 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஒரு லிட்டர் மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்யப்படும் போது மட்டுமே தேங்காய் எண்ணெய்க்கு 5 சதவீத வரி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஏழை, எளிய மக்கள் எவ்வளவு பேர் சமையலுக்கு ஒரு லிட்டருக்கு மேல் தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் 5 சதவீத வரியே விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேங்காய் எண்ணெய்க்கு அளவு அடிப்படையிலான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்ற சமையல் எண்ணெய்களுக்கு பொருந்தாத போது குறிப்பாக தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் விதித்திருப்பது லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் உள்ள தென் மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: