நள்ளிரவு நீர்வரத்து அதிகரிப்பு ஆழியார் அணையில் மீண்டும் உபரிநீர் திறப்பு

பொள்ளாச்சி :  ஆழியார் அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 2400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில மாதமாக தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்த மாதம் துவக்கத்தில் பெய்த கன மழையால், 120 அடி கொண்ட ஆழியார் அணை முழு அடியையும் எட்டியது. இதனால், கடந்த 3ம் தேதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.  

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அதிலும், 3 நாட்களுக்கு முன்பு  வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்தது. இதனால்  அணையின் பாதுகாப்பு கருதி, அனைத்து மதகுகள் வழியாக வினாடிக்கு 1100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

பின், சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு, மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக மழை குறைந்தது. இருந்தாலும் அப்பர் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கு மேல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென ஆழியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2200 கன அடியாக கிடுகிடுவென  அதிகரித்தது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி,  நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் ஆழியார் அணையின் 11 மெயின் மதகுகள் வழியாக வினாடிக்கு 2400 கன தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 3 மணி நேரம் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு ஒரு சில  மதகுகள் அடைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது.  இருப்பினும், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, அந்நேரத்தில் உபரிநீர் திறப்பு இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>