நூறு நாள் வேலை தொழிலாளர்களால் தருமத்துப்பட்டி நீர்வரத்து கால்வாய் ‘க்ளீன்’

சின்னமனூர் : தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் புதர் மண்டி, குப்பைக்குளங்களாக மாறி ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளன. அவற்றை சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. குளங்கள், ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்படாமல், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது.

சின்னமனூர் அருகே சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட தருமத்துப்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தருமத்துப்பட்டியிலிருந்து நாகலாபுரம் வரையில் 2 கிமீ தூரமுள்ள நீர்வரத்து கால்வாய் மண்மேவி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது. அதனால், மழைக்காலங்களில் போதுமான அளவு மழை பெய்தாலும், நீர்வரத்து கால்வாயில் மழைநீர் ெசல்ல முடியாமல் வீணாகி வருகிறது.

இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது மட்டுமின்றி, விவசாயத்திற்கும் பயன்படாமல் விளைநிலங்கள் காய்ந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம், இந்ந நீர்வரத்து கால்வாய் முழுவதும் கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டு, முறையாக தூர்வாரப்பட்ட தருமத்துப்பட்டியிலிருந்து சங்கராபுரம் வரையில் ஒரு கிமீ தூரம் வரை விரிவாக்கம் செய்து, வள்ளுவர் காலனி துவங்கி நாகலாபுரம் 18ம் கால்வாயில் சேர்த்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதமாக இப்பணிகள் நடந்து வந்தது. நீர்வரத்து கால்வாய் விரிவாக்கம் மட்டுமின்றி, மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் ஊற சங்கன்பாண்டு பள்ளங்கள் 15 மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும், 2 மீட்டர் ஆழமும் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் சப்ளை சீராகும். மேலும், விவசாயம் செழிக்கும், என்றனர்.

Related Stories:

>