×

ஊழல் வழக்குகளால் மீண்டும் சிக்கல்!: மியான்மர் மனித உரிமை போராளி ஆங்சாங் சுகிக்கு 60 ஆண்டு சிறை தண்டனை?

மியான்மர்: மியான்மரில் மனித உரிமை போராளி என்று அறியப்படும் பெண் தலைவர் ஆங்சாங் சுகி மீதான ஊழல் வழக்குகள் மீது அக்டோபர் 1ம் தேதி மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பெருவாரியாக வென்று ஆட்சியை பிடித்த ஆங்சாங் சுகி கட்சியின் அரசை பிப்ரவரி மாதம் 1ம் தேதி அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆட்சியை பிடித்த  ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங்சாங் சுகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது.  

எம்.பி.க்கள், கட்சி பிரதிநிதிகள் இன்றும் சிறையிலேயே உள்ளனர். இந்த நிலையில் தேர்தலின் போது சட்டவிரோதமாக வாக்கி டாக்கி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு, தேசத்துரோக வழக்கு, காலனியக ரகசிய சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றதாக சுகி மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று ஆங்சாங் சுகியின் வழக்கறிஞர் கின் மௌன்ஸா கூறியுள்ளார்.

4 வழக்குகளிலும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் தலா 15 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மியான்மரில் மக்கள் விடுதலைக்காக ஆங்சாங் சுகி ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர் ஆவார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான 76 வயதான ஆங்சாங் சுகிக்கு இந்த ஊழல் வழக்குகளில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.


Tags : Myanmar ,Aung San Suu Kyi , Corruption, Myanmar, Aung San Suu Kyi, Prison
× RELATED மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு