திண்டுக்கல் அனுமந்தநகர் குளத்தில் கழிவுநீரால் ‘கப்’

திண்டுக்கல் : திண்டுக்கல் அனுமந்த நகர் குளத்தில் கழிவுநீர் கலப்பதுடன், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்  பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த  நகர் அருகில் துளுக்கன்குளம் உள்ளது.  சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட  இக்குளம் அப்பகுதியில் ஆடு, மாடுகளின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்து  வந்தது.

  இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம்  கடந்த 10 ஆண்டுகளாக இக்குளத்தை  முறையாக பராமரிக்கவில்லை. இதனால்  இக்குளத்தில் தற்போது வீடுகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீர் கலந்து  வருகிறது. அண்மையில் பெய்த மழைநீருடன்,  கழிவுநீரும் கலந்து இக்குளம்  நிரம்பி காணப்படுகிறது. இதனுடன் குப்பை,  பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து  தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி கடும்  துர்நாற்றம் வீசுகிறது.

 மேலும் இதில்  கொசுக்களும் பல்கி பெருகி மக்களுக்கு  தொற்று நோய், மர்ம காய்ச்சலை பரப்பி  வருகிறது. இக்குளத்தை தூர்வாரி  சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தை  தூர்வாரி, சுற்றிலும் சுற்றுச்சுவர்  அமைத்து கழிவுநீர் கலப்பதை தடுத்து,  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>