நாகமலை புதுக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் பாலத்தில் விரிசல்

* வாகன ஓட்டிகள் பீதி

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு அருகே பெங்களூரு - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்ல வசதியாக பல்வேறு இடங்களில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

அதே போல் நாகமலை புதுக்கோட்டை மற்றும் தனக்கன்குளம் சந்திப்புகளுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதை ஒட்டிய இடத்தில் சுமார் 100 மீட்டர் தொலைவில் வடிவேல்கரை செல்ல மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இரண்டு பக்கத்தில் உள்ள தடுப்புச்சுவர்களில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் கீழே உள்ள சாலை வழியாகத்தான் வடிவேல்கரை பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

மேலும் மதுரை நகருக்குள் இருந்து வடிவேல்கரை கிராமத்திற்கு வரும் அரசு பஸ்சும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது. இந்த நிலையில் இந்த மேம்பால சுவர் இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்ப்படும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மாவட்ட நிர்வாகம் தலையீட்டு உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேம்பாலத்தை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: