அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டு பழமையான பாண்டியர் கால கல்தொட்டி கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டது. கோடை வெப்பத்தை  கால்நடைகள் தணிக்க நம் மூதாதையர்கள் ஆங்காங்கே பொது இடங்களில் நீர் நிரம்பிய கல்தொட்டிகளை அமைத்தனர்.  இத்தகைய கல்தொட்டியை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன், மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி, செல்வகணேசன் ஆகியோர், அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் கண்டறிந்துள்ளனர்.

 இக்கல்தொட்டியானது 7 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடிக்கு  கால் அடி குறைவான உயரம், ஒரு டன்னுக்கு மேற்பட்ட எடையும், பக்கவாட்டில் கல்வெட்டுடன் அமைந்துள்ளது.  அக்கல்வெட்டில் 4 வரிகளும், சில இடங்களில் எழுத்துக்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன.  இதுகுறித்து பேராசிரியர் விஜயராகவன் கூறுகையில், ‘‘கொமாவாமார் சபகைவத் கசுககடுதவதயாண்டு தன்சுமாண்ட்ரூன் கனணடுளு வெண்புக்காட்டு செக்காட்டுருக்கை  சமனைமா வன மெருமாள் பூவனெனரு மத்தல’’ என இக்கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது. வெண்புக்காட்டு செக்காட்டுருக்கை என்பதனை வெண்புநாட்டு செங்காட்டுருக்கை என்று கருதலாம்.

 செங்காட்டுருக்கை என்பது அருப்புக்கோட்டையின் பாண்டியர் கால பெயராகும். வெண்புநாடு என்பது அருப்புக்கோட்டையின் தெற்கு பகுதியை குறிக்கிறது. அருப்புக்கோட்டையின் தெற்கு பகுதியில் இருந்த பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் பூவன் என்பவர் கொடையாக இக்கல்தொட்டியை வழங்கியுள்ளார்.  இந்திய கல்வெட்டு ஆவணங்களின்படி பிற்கால பாண்டியர்  13ம் நூற்றாண்டு காலத்தில் தான்  இவ்வூரானது செங்காட்டுருக்கை என அழைக்கப்பட்டது என்பதை அறியலாம்.

 செங்காட்டுருக்கை என்பதன் பொருள் சிவந்த மண் கொண்ட பொதுவான வணிகர்களின் இருப்பிடமாகும்.  மதுரை நாயக்கரான வீரப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் இவ்வூரில் கோட்டை கட்டப்பட்டதால் அருப்புக்கோட்டை என பெயர் மாறியது.  இதன்மூலம் நம் முன்னோர்கள் பிற உயிர்களை தன் உயிராக நேசிக்கும் ஜீவகாருண்ய நெறியில்  மேம்பட்டிருந்தார்கள் என்பதனை இக்கல்ெதாட்டி  உணர்த்துகிறது’’ என்றார்.

Related Stories: