தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!: ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..!!

சென்னை: தமிழ்நாட்டின் 26வது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆர்.என்.ரவிக்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 1976ல்  ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் சி.பி.ஐ, மத்திய உளவுப்பிரிவுகளில் பணியாற்றியவர். 2018ல் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து கவர்னராக இருந்து வந்தார். அச்சமயம் நாகலாந்து கிளிர்ச்சியர்களை அமைதி பாதைக்கு திருப்பிய பெருமை இவரையே சேரும். மேலும் பயங்கரவாத தடுப்பு பணிகளை ஒருங்கிணைத்தவர். தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கவர்னர் மாளிகை அதிகாரிகளும் அவரை வரவேற்றார்.

மேலும், தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் ஆளுநரை வரவேற்றனர். கவர்னருடன் அவரது உறவினர்கள் 15 பேரும் வந்துள்ளனர். கவர்னர் மாளிகையில் இன்று காலை 10.35 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் பந்தல் அமைத்து விழா நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 26வது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் அதிகபட்சமாக 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: