×

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடுரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர். இதனை தடுக்க மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம் உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையின் நடுவே, மாமல்லபுரம் பகுதியில் மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.  இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்பட பல்வேறு வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

அதேபோல் பைக்கில் செல்பவர்கள், திடீரென குறுக்கோ ஓடும் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஒருசில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அறங்கேறுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையும் மீறினால், மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், மாமல்லபுரம் இசிஆர் சாலை முழுவதும் மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கயிற்றால் கட்டி பராமரிப்பது இல்லை.

காலையில் பால் கறந்த பிறகு கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஒரு சில உரிமையாளர்கள் மாடு இருக்கும் இடத்துக்கே சென்று பால் கறந்து விற்பனை செய்கின்றனர். அவர்கள், இப்படியே விடுவதால் தினமும் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுவதுடன், ஒரு சில நேரங்களில் மாடுகளும் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விரித்து, வாகன ஓட்டிகளின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Neurood ,East Coast Road ,Mamallapura , East Coast Road, cows, accident, motorists
× RELATED கிழக்கு கடற்கரை சாலையில் டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயிற்சி