சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: எம்பியிடம் பயணிகள் சரமாரி புகார்

ஆவடி: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் பேசின் பாலம், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர் உள்பட 28 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடத்தில் தினசரி 240 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.260 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், இதில் பல ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகள் இன்றி, பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் நலச் சங்கமும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனாலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், பொதுமக்களின் புகார்கள் குறித்து திருவள்ளூர் தொகுதி எம்பி டாக்டர் கே.ஜெயக்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவர், தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ஆய்வுகளை செய்ய முடிவு எடுத்தார். அதன்படி, நேற்று காலை ஆவடி அருகே திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் இருந்து திருவாலங்காடு வரை கே.ஜெயக்குமார் எம்பி, ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டார். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது, ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் நலச்சங்கம் ஆகியோர், ரயில்வே அதிகாரகிளின் மெத்தனம் குறித்து சரமாரியாக புகார்களை கூறினர்.

குறிப்பாக, மேற்கண்ட பல ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லை. கழிப்பறைகள் பூட்டி கிடக்கிறது. போதிய மின்விளக்கு வசதி இல்லை. ரயில்வே போலீசார், இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. அண்ணனூர், சேக்காடு, கடம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சில ரயில் நிலையங்களில் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் அமைக்கவும், பல ரயில் நிலையங்களில்  மேற்கூரைகளை வசதிகளை அதிகப்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி சரமாரியாக புகார் அளித்தனர்.

 இதனை கேட்டறிந்த கே.ஜெயக்குமார் எம்பி, பயணிகளின் குறைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குறைகளை அதிகாரிகள் நிவர்த்தி செய்ய விட்டால், ரயில்வே உயர் அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது தென்னக ரயில்வே உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் லயன் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்பரம், விக்டரி மோகன், எஸ்.பவன்குமார், டி.ஜெ.விசுவநாதன், விக்டரி ஜெயகுமார் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: