கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய கரும்பூர் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு, தினமும் இரண்டு கால பூஜை செய்து, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கிராம மக்கள் சிலர், கோயில் வழியாக சென்றனர். அப்போது, பொன்னியம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்ததும், கிராம மக்கள் திரண்டனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (46). கடந்த 2 நாட்களுக்கு முன் பிரகாஷ், கும்மிடிப்பூண்டியில் இருந்து எளாவூர் பகுதிக்கு சொந்த வேலையாக காரில் புறப்பட்டார்.  அப்போது, வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. இதனால், பிரகாஷ் காரை நிறுத்தி காத்திருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த 2 பேர், கார் மீது உரசியபடி சென்றனர். அவர்களிடம், பார்த்து பைக்கை ஓட்டுங்கள் என அவர் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, பிரகாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றனர்.புகாரின்படிகும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பரத் (27), அஜித் (25)  ஆகியோரை கைது செய்தனர்.

* கும்மிடிப்பூண்டி அருகே  காய்லர்மேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (36).  கடந்த 14ம் தேதி கும்மிடிப்பூண்டி பஜார், பழைய தபால் தெரு வழியாக பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் மீது ஒரு கார் மோதியது. இதனால்,  சுதாகருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை  ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். அந்த கார் நேற்று முன்தினம் திடீரென மாயமானது. இதையடுத்து, 2 தனிப்படைகள் அமைத்து, மாயமான காரை தேடி வந்தனர். இந்நிலையில், காவல் நிலையத்தில் திருடுபோன கார் போரூர் பகுதியில் சுற்றி வருவது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று காரை கைப்பற்றினர். மேலும், அதனை கடத்திய போரூரை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணா (26) என்பவரை கைது செய்தனர்.

புழல்: சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சி, அட்டைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி காயத்ரி (22). இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது காயத்ரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 13ம் தேதி அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி, கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் பிரசாந்த் தேடினார். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஆவடி: மணலி, விச்சூர் கிராமம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜோஸ்வாராஜ் (29). பாடி சிடிஎச் சாலையில் லட்டு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜோஸ்வாராஜ் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 7 கிலோ லட்டு, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடுகின்றனர்.

* ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகரில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளாள். அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறாள். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிறுவன், சிறுமியை திருமண ஆசை காட்டி, திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை, திரு விக தெருவில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு அழைத்து சென்றான். அங்கு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார். இதையடுத்து, இரு வீட்டு பெரியோர்களின் சம்மதத்துடன் அவர்கள் குடும்பம் நடத்தினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், நேற்று முன்தினம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி,  ஆவடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, சிறுவனை நேற்று கைது செய்தார். அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், அக்ரஹாரம், எல்லையம்மன் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் குமார் (40), பெயின்டர். இவரது மனைவி துர்கா (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் 2ம் தேதி இரவு குமார் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது துர்கா மீன் குழம்பு சமைத்து இருந்தார். குமார் ஆடிக்கிருத்திகையொட்டி ஏன் மீன் குழம்பு செய்தாய் என கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், இரும்பு ராடால் துர்காவை தாக்கினர். அவர், மண்டை உடைந்து மயங்கி விழுந்தார். இதனால், துர்கா இறந்துவிட்டதாக முடிவு செய்த குமார், போலீசுக்கு பயந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துர்காவை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா நேற்று இறந்தார்.

Related Stories:

>