உணவில் விஷம் வைத்து கொலை தேசியக்கொடி போர்த்தி மயில்களுக்கு மரியாதை

திருமலை: ஆந்திராவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 5 மயில்களுக்கு வனத்துறையினர் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். ஆந்திர மாநிலம், சித்தூர்  மாவட்டம், நர்ரவண்டலப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினரும், கால்நடை துறையினரும் சென்றனர். அங்கு 5 மயில்கள் இறந்திருப்பது தெரிந்தது. அவற்றுக்கு அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், மயில்கள் விஷம் கலந்த உணவை தின்றதால் உயிரிழந்தது தெரிந்தது.

கிராமத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளதால்  அங்கிருந்து அடிக்கடி இரை தேடி வரும் மயில்களுக்கு மர்ம நபர்கள் விஷம்  கலந்த உணவை வைத்து கொன்றுள்ளனர். தேசிய பறவையாக மயில்கள் போற்றப்படுவதால், மரபுபடி தேசியக்கொடியை அவற்றின் மீது போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், வனத்துறையினர் 5 மயில்களையும் வனப்பகுதியில் தகனம் செய்தனர். மேலும், விஷம் வைத்து மயில்களை கொன்றது யார்? என கிராம மக்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் மீது தேசிய உயிரினத்தை கொன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: