×

உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு  வழங்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதன் அடிப்படையில், மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீதத்தை இவர்களுக்கு அளிப்பதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 30ம் தேதி தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், தேசிய அளவிலான 50 சதவீத ஒதுக்கீட்டின் அளவை பாதிக்கும்,’ என்று தெரிவித்தார்.  நீதிபதி சந்திராசூட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்ததது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் இதே கோரிக்கை கொண்ட பல்வேறு ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதனால், இந்த வழக்கையும் அவற்றோடு இணைத்து விசாரணை நடத்தப்படும். இது பற்றி பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,’ என தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு மேல்முறையீடு
இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில், ‘அகில இந்திய  ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான இடஒதுக்கீடு  வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி இடஒதுக்கீட்டை  பின்பற்ற முடியாது. அதனால், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு  இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு  அளிப்பது அனுமதிக்கக் கூடியதுதான்.

அதே நேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, மொத்த இடஒதுக்கீட்டு  அளவான 50 சதவீதத்தை தாண்டிவிடும். அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல்  இல்லாமல் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என கூறியிருந்தது. இதை எதிர்த்து, உச்ச  நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

Tags : Supreme Court ,Union Government , Upper Class, Reservation, Government of the United States,Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...