கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் அரசு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை: உயர் நீதிமன்ற தீர்ப்பும் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோயில் நிலத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணை, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்கு  வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான அரசாணையை அதே அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நிலத்தை மதிப்பீடு செய்வதற்காக சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, நிலத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்காக பெரியசாமி, குழந்தை வடிவேல் ஆகிய 2 பேரை தமிழக அரசு பரிந்துரை செய்வதாக நீதிமன்றத்தில் தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் தெரிவித்தார். மேலும், ‘கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். கோயிலுக்கு என தனியாக தொகுப்பு நிதி ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,’ என்றும் அவர் தெரிவித்தார்.  அவரது பதிலை ஏற்ற நீதிமன்றம், பெரியசாமி, குழந்தை வடிவேலுவை மதிப்பீட்டாளர்களாக நியமனம் செய்தது. ‘இவர்கள் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோயில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அது குறித்த அறிக்கையும் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு ஒதுக்கியுள்ள தொகுப்பு நிதி ரூ.2 கோடியை கோயிலின் பராமரிப்பு பணிகளுக்காக செலவிடலாம். மதிப்பீட்டாளர்களின் அறிக்கையில் திருப்தியடைந்தால் மட்டுமே கட்டுமான பணிகளை தொடர அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கான அறங்காவலர்களை விரைவில் நியமிக்க வேண்டும்,’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு அர்த்தநாரிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவது குறித்து தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை, நிலத்தை குத்தகை எடுப்பது, நிலத்தை மதிப்பீடு செய்துவது உட்பட உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு தப்பில் பதில் அளிக்கலாம்,’ என தெரிவித்தனர்.

Related Stories:

>