ஒரே மாதத்தில் 4 முறை ஒரு கோடியை தாண்டி சாதனை ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளில், ஒரே நாளில் 2 கோடி பேருக்கு மேலாக தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், அவருடைய  20 ஆண்டு கால அரசியல் சேவையையும் பாஜ.வினர் நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடினர். அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களும், உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அளிக்கும் பரிசாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்தது. இதில், நேற்று மட்டுமே 2 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதை மோடிக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில் தெரிவித்தார். முன்னதாக, நேற்று மதியம் 1.30 மணி வரையில் மட்டுமே ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது. முன்னதாக 4 முறை இச்சாதனை எட்டப்பட்டுள்ளது.இதன்மூலம்,  நாட்டில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78.72 கோடியை கடந்துள்ளது. வரும் அக்டோபர் 2வது வாரத்தில் 100 கோடி  எண்ணிக்கை எட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் வாழ்த்து, மறுபக்கம் எதிர்ப்பு

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள  காங்கிரஸ், அதே நேரம் நேற்று இந்த தினத்தை விவசாயிகள் விரோத தினம், விலை உயர்வு தினம், வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரித்தது.

பவானி தேவி வாளுக்கு ரூ.10 கோடி கிடைத்தது

பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினர் வழங்கும் நினைவுப் பரிசுகள் அடிக்கடி ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை கங்கை தூய்மை திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்ட இந்த நினைவுப் பரிசுகளை ஒன்றிய கலாசாரத் துறை நேற்று தனது இணையதளத்தின் மூலம் இ-ஏலம் விட்டது. இதில், பாராலிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் பயன்படுத்திய உபகரணங்களும் ஏலம் விடப்பட்டது. இது, நேற்று முதல் அக்டோபர் 7 வரை நடக்கிறது.

* நேற்று நடந்த ஏலத்தில், டோக்கியோ பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற எத்திராஜ் பயன்படுத்திய ராக்கெட் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

* பென்சிங் போட்டியில் பதக்கம் வெற்ற வீராங்கனை பவானி தேவியின் பென்சிங் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

* ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பாக்சிங் வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் பயன்படுத்திய கையுறைகள் ரூ.1.80 கோடிக்கு ஏலம் போனது.

* ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டுக்கு முதல் தங்கத்தை வெல்வதற்காக வீசப்பட்ட ஈட்டி ரூ.1.20 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ.1 கோடி.

* ஏலத்தின் நிறைவு நாளான அக்.7ம் தேதி, எந்த பொருள் அதிக ஏலத்துக்கு எடுக்கப்பட்டது என்ற விவரத்தை ஒன்றிய கலாச்சார துறை வெளியிடும்.

Related Stories:

>