×

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வராது....நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

* உணவு சப்ளை நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி
* பேனாவுக்கு 18 சதவீதம் மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் இப்போதைக்கு ஜிஎஸ்டிக்குள் வராது என, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சில மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மருத்துவ உபகரணங்களுக்கு இந்த சலுகை கிடையாது. இதுபோல், பேனாவுக்கு 18 சதவீதம், உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.பல்வேறு வரி முறைகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது.  வரி விதிப்பில் மாற்றம் செய்வது மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் 12ம் தேதி கூட்டம் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 20 மாதங்களாக இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக மட்டுமே நடந்து வந்தது. 2019ம் ஆண்டு டிசம்பர் 18க்குப் பிறகு, முதல் முறையாக நேற்று 45வது ஜிஎஸ்டி கவுன்சில் நேரடி கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்,  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. நேரடி கூட்டம் என்பதாலும், குறுகிய காலத்துக்குள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும், சில மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டம் முடிந்த பிறகு, இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதுபோல், மருந்து பொருட்களுக்கு வரி குறைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசலுக்கு கலால் மற்றும் வாட் வரிகள் விதிக்கப்படுகின்றன. இவற்றை ஜிஎஸ்டியில் சேர்ப்பதால், மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவது தற்போது சரியானதல்ல என்று ஜிஎஸ்டி கவுன்சில் கருதுகிறது.கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கான வரிச்சலுகை, மேலும் 3 மாதம் நீட்டித்து, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், இந்த வரிச்சலுகை பலன்களை மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கவில்லை. சில உபகரணங்களுக்கு மட்டும், இந்த மாதம் 30ம் தேதி வரை சலுகை நீட்டிக்கப்படுகிறது. ஜோல்ஜென்ஸ்மா, வில்டெப்சோ போன்ற தசைநார் வலுவிழப்பு நோய்க்கான மருந்துகளை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதனால், இந்த மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதுபோல், ஸ்விகி, ஜோமெட்டோ போன்ற நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

இதுபோல், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, 18 சதவீத வரி பிரிவில் இருந்து 5 சதவீதத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. டீசலில் கலப்பதற்கான பயோ டீசல் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான தேசிய பெர்மிட் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து குத்தகைக்கு பெறப்படும் விமானங்களுக்கு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இரட்டை வரி விதிப்பை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பேனாக்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதுபோல், குறிப்பிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளின் கருவிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும். காலணிகள் மற்றும் டெக்ஸ்டைல்களுக்கான வரி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படும்.  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான உபகரணங்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.  ஆம்போடெரிசின் பி (0%), டோக்லிசுமாப் (0%), ரெம்டிசிவிர் (5%), ஹெப்பாரின் (5%) உள்ளிட்ட மருந்துகளுக்கு ஜிஎஸ்டி சலுகை வரி விகிதம் பொருந்தும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman , Finance Minister Nirmala Sitharaman announces petrol and diesel Does not fall under GST
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...