மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படம் பதிவேற்றியவர் கைது

துரைப்பாக்கம்: பள்ளி மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில், ஆபாச படத்தை  பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் அடுத்த பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  ஜூம் செயலிக்கான, ‘யூசர் நேம், பாஸ்வேர்டு’ அனுப்புவதற்கும், மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்கும், பள்ளி சார்பில், ‘வாட்ஸ்அப்’ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் நேற்று முன்தினம் ஆபாச படம் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள்  கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி நேற்று நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில், ஆபாச படம் பதிவேற்றம் செய்தது, அப்பள்ளி மாணவர் ஒருவரின் உறவினரான மதுராந்தகத்தை சேர்ந்த பசுபதி (28) என்பதும், இவர் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது, மாணவனுக்கு தெரியாமல், அவனது வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  

Related Stories:

>